நீட் முடிவுகளை வெளியிட என்.டி.ஏக்கு அனுமதி… உச்சநீதிமன்றம் அதிரடி!!

By Narendran SFirst Published Oct 28, 2021, 6:01 PM IST
Highlights

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததோடு அதுதொடர்பான மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு  நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதியுள்ள நிலையில் மராட்டிய மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெற்ற மையம் ஒன்றில், வினா மற்றும் விடைத்தாள்களுக்கு இரு வேறு விதமான வரிசை எண்கள் வழங்கப்பட்டதாக வைஷ்ணவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை வழக்கு தொடர்ந்தது. நீட் முடிவுகள் வெளியிட தாமதமானால், இளங்களை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அது பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் எனவும் தனது மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். என். ராவ், சஞ்சீவ் கண்ணா, பி. ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு தொடர்ந்த ஒரு மாணவர் 130 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மற்றொருவர் 160 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால், இதே போன்ற சிக்கலை 6 மாணவர்கள் சந்தித்துள்ளனர் என்றார்.  இந்த வாதத்தை கேட்ட நீதிபதி எல். என். ராவ், நால்வர் இதை பிரச்னையாக கருதவில்லை. இருவருக்கு மட்டும் இது எப்படி பிரச்னையாகும். ஏன் அவர்களால் தேர்வை முடிக்க முடியவில்லை. நான்கு மாணவர்கள் 200 கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். ஆனால், மனுதாரர்களான இரண்டு மாணவர்கள் 130 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளனர் என்றார். மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அலுவலர்கள் செய்த தவறை மற்ற நான்கு மாணவர்களும் உணரவில்லை. ஆனால், இந்த இரண்டு மாணவர்கள் உணர்ந்தனர். அவர்கள் விடைகளை எழுதினாலும் அது தவறாக மதிப்பிடப்படும் என்று அவர்களுக்குத் தெரியும் என பதில் அளித்தார். இறுதியாக நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த வழக்கின் விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

click me!