
மனநல பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கர்ணன் உத்தரவுகளை வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் கர்ணன். இவரை, கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த புகார்க் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கர்ணன்அனுப்பிவைத்தார்.
கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதுமட்டுமன்றி, இந்த வழக்கில் கர்ணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டது.
மேலும் அவருக்கு மனநல பரிசோனை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஆனால் மனநல பரிசோதனைக்க ஒத்துழைக்காத நீதிபதி கர்ணன்,நேற்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதனால் கடுப்பான உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றத்தை அவமதித்தது, மன நல பரிசோதனைக்கு ஒத்துழைக்காதது போன்ற காரணங்களுக்காக நீதிபதி கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் நீதிபதி கர்ணனின் தீர்ப்புகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு நீதிபதிக்கு தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை.