நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ பெர்சண்டைலுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் அல்லது அதற்கு குறைவாக நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மருத்துவ படிப்பின் தரத்தை குறைக்கும் எனவும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் லாபத்துக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதால், மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
உலகின் நான்காவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்ட நாடானது இந்தியா - ஆய்வு முடிவுகள் இதோ!
இதனிடையே, நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ பெர்சண்டைல் தொடர்பான அறிவிப்புக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பட்டியலிடப்படவில்லை என்றாலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அதன்படி, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவானது விசாரணைக்கு வந்தபோது, “மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை” என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.