எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

By Manikanda Prabu  |  First Published Oct 30, 2023, 5:35 PM IST

எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


மகாராஷ்டிராவில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.

ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஏக்நாட் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Latest Videos

undefined

இதையடுத்து, ஏக்நாட் ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என கோரி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், சபாநாயகர் தொடர்ந்து கால தாமதம் செய்து  வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: இதுதான் காரணம் - மத்திய அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

இந்த நிலையில், சிவசேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிர மாநில சபாநாயகருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறும் மகாராஷ்டிர மாநில சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மாகாராஷ்டிரா சபாநாயகரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், சபாநாயகரால் எங்கள் உத்தரவை மீற முடியாது என காட்டம் தெரிவித்துள்ளது. சபாநாயகரின் காலக்கெடு திருப்திகரமாக இல்லை என்றால், 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய விசாரணையின்போது, வரவிருக்கும் தீபாவளி விடுமுறை மற்றும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை மேற்கோள் காட்டி, இந்திய அரசியலமைப்பின் 10ஆவது அட்டவணையின் கீழான அந்த நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மகாராஷ்டிர மாநில சட்டமன்ற செயலகம் தனது பதிலை சமர்ப்பித்தது. ஆனால், இதற்கு முன்பு பலமுறை அவகாசம் வழங்கியதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அதனை ஏற்கவில்லை.

click me!