26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

Published : Oct 17, 2023, 02:56 PM IST
26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

சுருக்கம்

பெண்ணின் 26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான திருமணமான 27 வயது பெண் ஒருவர் தனது 26 வார கருவை கலைக்க அனுமதித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்ணின் 26 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயான அப்பெண் மூன்றாவது முறையாக கருத்தரித்திருந்தார். ஆனால், அக்கருவை கலைக்க அனுமதி கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளர்க்கும் நிலையில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு கருவை கலைக்க அப்பெண்ணுக்கு அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதில், நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்வு விசாரிக்கப்பட்டு வந்தது.

மதுரையில் ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்!

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாயின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையுடன், கருவில் வாழும் பிறக்காத குழந்தையின் உரிமைகளும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய், சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒரு குழந்தையை எங்களால் கொல்ல முடியாது” என்று தெரிவித்தது.

இந்த நிலையில், பெண்ணின் 26 வார கருவை கலைக்க அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க உத்தரவிட்டால் அது கருக்கலைப்பு சட்டத்தின் 3, 5ஆவது பிரிவை மீறுவதாக ஆகிவிடும் என சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், குழந்தை வேண்டாம் என்றால் 26 வாரங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என கேள்வி எழுப்பியது. மேலும், குழந்தை பிறக்கட்டும். அதனை வளர்க்க தாய் விரும்பவில்லை என்றால் குழந்தையை அரசு பராமரிக்கட்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்
நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!