இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியின் பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த பெங்களூருவை சேர்ந்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தியின் பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்த அருண்குமார் (34) என்ற பூசாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் நடக்கவுள்ள கன்னட கூட்டா நிகழ்வில் சுதா மூர்த்தி தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக பொய்யான தகவலை அளித்து அவர் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயநகர் போலீசார் அருண்குமாரை கைது செய்துள்ளனர்.
சுதா மூர்த்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் தொடர்பாக, இரண்டு பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுகுறித்த போலீசார் விசாரணையில், இரண்டு முறைகேடுகளுக்கும் மூளையாக செயல்பட்டவர் அருண் குமார் என்பது தெரியவந்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவின் கன்னட கூட்டாவைச் சேர்ந்த குழுவின் 50ஆவது ஆண்டு விழாவில் சுதா மூர்த்தி தலைமை விருந்தினராகப் பங்கேற்பதாக உறுதியளித்த குமார் ரூ.5 லட்சத்தை ஏமாற்றியதாக தெரிகிறது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதமே அக்குழுவில் இருந்து வந்த அழைப்பை நிராகரித்த சுதா மூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: மகளின் உடலை கண்டறிய ஆப்பிள் வாட்சை பயன்படுத்திய தந்தை!
ஆனால், அந்த நிகழ்வில் சுதா மூர்த்தி தலைமை விருந்தினராக கலந்து கொண்டது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான பின்னர், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான விசாரணையில், அமைப்பாளர்களிடம் மோசடி செய்து, முன்பணமாக ரூ.5 லட்சம் வசூலித்ததை அருண் குமார் ஒப்புக்கொண்டார்.
இந்த மோசடியில் முன்னதாக, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பெங்களூரில் இரண்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுதா மூர்த்தியின் நிர்வாக உதவியாளர் மம்தா சஞ்சய் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் லாவண்யா மற்றும் ஸ்ருதி என அடையாளம் காணப்பட்டனர்., அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூளையாக செயல்பட்ட அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.