ஏப்.1 முதல் 8 லட்சம் வாகனங்களுக்கு தடை - உச்சநீதிமன்றம் பகீர் உத்தரவு

First Published Mar 29, 2017, 5:50 PM IST
Highlights
supreme court banned 8 lakhs vehicles


பாரத் ஸ்டேஜ் எமிசன் எனச் சொல்லக்கூடிய புகையை அதிகமாக வெளித்தள்ளும் பி.எஸ்.-3 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 8.24 லட்சம் வாகனங்களை வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சாலையில் ஓட்ட உச்ச நீதிமன்றம் அதிரடி தடைவிதித்துள்ளது.

நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேடு, காற்றுமாசு, கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் ஆகியவை அதிகரித்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு தேசிய மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம், புகை அதிகமாக, கார்பனை அதிகமாக வெளித்தள்ளும் பி.எஸ்.-3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஓடத் தடைவிதித்து கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.

புகையை குறைவான வெளியிடும் பி.எஸ். 4 தொழில்நுட்பத்தில் கார்கள், வாகனங்கள், இருசக்கரவாகனங்களை தயாரிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017ம்ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்கு பின் பிஎஸ்-3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டக்கூடாது எனத் தீர்ப்பளித்தது.

 

இந்நிலையில்,  இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிஎஸ். 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இன்னும் 9 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

அவற்றை விற்பனை செய்தபின் நாங்கள் பிஎஸ்.4 விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை தயாரிக்கிறோம். அதுவரை இந்த வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ பி.எஸ். 3-தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 8 லட்சத்து 24 ஆயிரத்து 275 வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. 

இதில் 96ஆயிரத்து 724 வாகனங்கள் வர்த்தகரீதியான பயன்படும் சரக்கு வாகனங்கள், 6 லட்சத்து 71 ஆயிரத்து 308 வாகனங்கள் 2 சக்கர வாகனங்கள், 40 ஆயிரத்து 48 வாகனங்கள் 3 சக்கரவாகனங்கள், 16 ஆயிரத்து 198 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடியாகும்.

பி.எஸ். 4 விதிமுறைகள் படிதான் வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், தேக்கமடைந்துள்ள இந்த வாகனங்களை விற்பனை செய்ய எங்களுக்கு அனுமதிக்க வேண்டும். இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் போனால், 20 ஆயிரம் டீலர்கள் பாதிக்கப்படுவார்கள், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்று வாதிடப்பட்டது.

அதன்பின் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா அளித்த தீர்ப்பில், “ தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிஎஸ். 4 வாகனங்களை தயாரிக்க வேண்டும், பி.எஸ். 3 தொழில்நுட்பத்தில் ஓடும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று கடந்த 2010, 2015ம் ஆண்டு இருமுறைகூறி தெளிவு படுத்திவிட்டது. இதை நாங்களும் உறுதி செய்துவிட்டோம்.

2017 மார்ச் 31-ந்தேதிக்கு பின் பி.எஸ். 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என உறுதி செய்தோம்.

ஆதலால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், உடல்நலன்தான் எங்களுக்கு முக்கியம், வர்த்தக ரீதியாக, லாபநோக்கில் செயல்படும் வாகன உற்பத்தியாளர்கள் நலன் முக்கியமல்ல.

ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து பி.எஸ். 4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவாகனங்கள் தான் விற்பனைசெய்ய வேண்டும் எனத் தெரிந்து இருந்தும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தாமல் வாகன தயாரிப்பாளர்கள் மெத்தனம் காட்டி இருக்கிறார்கள்.

கடந்த 2010, 2015ம் ஆண்டு வாய்ப்பு அளித்தது போல் இப்போது வாய்ப்பு அளிக்கப்போவதில்லை. ஏப்ரல் 1-ந்தேதி முதல் பி.எஸ். 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு தடைவிதிக்கிறோம். இதை மத்தியஅரசும் அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

click me!