பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது
இந்தியாவில் எம்.டி.பி., எனப்படும் கருக்கலைப்புச் சட்டம், 1971ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் 2021ஆம் ஆண்டில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் யார் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற விதிகள் சேர்க்கப்பட்டன.
அதன்படி, திருமணமான பெண்கள், பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க அனுமதி உள்ளது. அதேபோல், திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடையும் பெண்கள், 20 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டத்தின் படி, 24 வாரம் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி இருப்பதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு 28 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்!
முன்னதாக, திருமணம் ஆகாத பெண் ஒருவர், கர்ப்பமாகி 22 வாரங்கள் ஆன நிலையில், தனது காதலர் திருமணத்துக்கு மறுத்துவிட்டதால், கருக்கலைப்பு செய்து கொள்ள உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், திருமணம் ஆகாதவர் என்பதால் உயர் நீதிமன்றம் அவர் கருக்கலைப்பு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருமணம் ஆகாத தனி பெண்களும் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.