இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்!

By Manikanda Prabu  |  First Published Apr 22, 2024, 10:53 AM IST

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்


நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசியளவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், கேரளாவை பொறுத்தவரை இரு கட்சிகளும் எதிர் துருவங்கள்தான்.

Tap to resize

Latest Videos

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என அவர் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சட்டங்கள் குறித்து பெரிய பட்டியலே இருக்கிறது. பாஜக ஆட்சியில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 5 சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வார்த்தையும் நான் எழுதியதுதான். எனக்கு தெரியும் அதன் நோக்கம் என்னவென்று. சிஏஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படாது. அச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும். இந்தியா கூட்டணி தலைமையில் மத்தியில் ஆட்சியமைந்ததும், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்.” என்றார்.

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்  அறிக்கையில் சிஏஏ குறித்து எந்த வாக்குறுதியும் இடம்பெறாத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மத வெறுப்பு பேச்சு: காங்கிரஸ் கடும் கண்டனம்!

முன்னதாக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பானை வெளியிட்டது. சிஏஏ சட்டத்திற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

click me!