
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அரசியல் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். அரசியல் தலைவர்கள் தங்களின் சொந்த காரணங்களுக்காக நீதிமன்ற செயல்பாட்டை பயன்படுத்தவிடக்கூடாது என்பதில், நீதிமன்றம் கவனமாக இருப்பது அவசியம் என்று நீதிபதிகள் சுப்பிரமணிய சாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்ேததி மர்மமான முறையில் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டல் அறையில் இறந்துகிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் விஷம் குடித்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், இன்னும் அவரின் இறப்புக்கு உண்மையான காரணம் குறித்து தெரியவில்லை.
இந்நிலையில், சுனந்தா புஷ்கர் இறப்பு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தார். அதன்பின், சுப்பிரமணியன் சாமி கூடுதலாக தாக்கல் செய்த மனுவில், இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் 45 நாட்களில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை தனக்கு வழங்க உத்தர வேண்டும் எனக் கேட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ். முரளிதர், ஐ.எஸ். மேத்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது-
பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமியின் இந்த மனுவை பொது நலன் மனுவாக எடுத்துக்கொண்டு விசாரிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தாக்கம் இருந்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால் நிரூபிக்க முடியவில்லை.
மேலும், சுப்பிரமணிய சாமி ரகசியமாக திரட்டிய தகவல்கள் சசிதரூருக்கும், டெல்லி போலீசாருக்கும் எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இருப்பதாக நீதிமன்றம் பார்க்கிறது.ஆனால், அவர் எந்த தகவலையும், புள்ளிவிவரங்களையும் ரகசியமாக வைக்கவில்லை என்கிறார்.
இந்த மனுவில் குறிப்பாக கூறிய குற்றச்சாட்டு குறித்து சுப்பிரமணிய சாமியிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கிறார்.
அரசியல்வாதிகள் தங்களின் சொந்த காரணங்களுக்காக நீதிமன்ற செயல்பாடுகளை பயன்படுத்தக்கூடாது என்பதில் நீதிமன்றம் மிகுந்த கவனமாக இருப்பது அவசியமாகிறது. அரசியல்வாதிகள் பொதுநல மனுதாக்கல் செய்ய முடியாது என்று கூறவில்லை. ஆனால், அதேசமயம், மற்றொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைத்து தாக்கல் செய்யும் மனுக்கள் மீது நீதிமன்றம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஆதலால், சுப்பிரமணிய சாமியின் மனுவை பொதுநலன் மனுவாக ஏற்று விசாரிக்க முடியாது. அரசியல்நோக்கத்தோடு, வடிவமைக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட பொதுநல மனு என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.