
தில்லியில் நேற்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கணவர் மற்றும் குழந்தையின் கண் எதிரே மனைவியை யாரோ எதிரிகள் சுட்டுக் கொன்று விட்டதாக பரவிய செய்தியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில், தன் இன்னொரு மனைவி தன்னுடனேயே அவர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், இந்த மனைவியை தானே சுட்டுக் கொன்றுவிட்டதாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்தத் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியின் ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் மெஹ்ரா. தொழில் அதிபரான இவருடைய மனைவி பிரியா மெஹ்ரா. இவர்களுக்கு 2 வயது மகன் இருக்கிறான்.
பங்கஜ் மெஹ்ரா தனது காரில் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை வீடு திரும்பிய இவர்கள், காரில் இருந்து இறங்கிய போது, வீட்டுக்கு அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக, பங்கஜ் மெஹ்ரா கூறியுள்ளார்.
அப்போது யாரோ துப்பாக்கியால் சுட்டதில் பிரியாவின் உடலை குண்டுகள் துளைத்ததாகவும், உடனே,
ரத்த வெள்ளத்தில் சரிந்த தன் மனைவியை மருத்துவமனையில் கொண்டு போய் தானே சேர்த்ததாகவும் கூறியுள்ளார் பங்கஜ் மெஹ்ரா.
இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ப்ரியா மெஹ்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பங்கஜ் மெஹ்ரா போலீஸாரிடம் கூறுகையில் தான் ஒருவரிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில், தன்னைக் கொல்ல வந்தவர்கள் மறைந்திருந்து சுட்டனர் என்றும், அப்போது, தன் மீது பாய வேண்டிய துப்பாக்கி ரவைகள் தன் மனைவியைத் துளைத்துவிட்டதாகவும் கூறினார் பங்கஜ்.
அண்மைக்காலமாக தில்லியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் 5 பேர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிர் இழந்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் போலீஸார் மிகத் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதிகாலை 4.15க்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும், நான்கு பேர் ஒரு காரில் வந்து சுட்டதாகவும் கூறியிருந்தார் பங்கஜ். மேலும், தான் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, தன் காரை முந்திச் சென்று காரை நிறுத்தியவர்கள், கார் கதவை உடைத்து தன்னை தாக்க முயன்றனர் என்றும், தான் தடுத்த போது, துப்பாக்கியால் சுட்டனர் என்றும், அப்போது தவறுதலாக குண்டுகள் தன் மனைவியின் மீது பாய்ந்து விட்டதாகவும் கூறியிருந்தார். அப்போது துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்துவிட்டதாகவும், வேறொரு துப்பாக்கியை எடுப்பதற்காக தங்கள் காருக்குள் சென்றபோது, அந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி காரை விருட் என எடுத்துக் கொண்டு தப்பித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
உடனே தாம் போலீஸாருக்கு போன் செய்து, மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்லும் தகவலை அவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, பிரியா மெஹ்ரா சுயவுணர்வுடன் இருந்ததாகவும், அவர் தன் கண்களை லேசாக சிமிட்டியதாகவும், அரை மணி நேரம் கழித்தே அவர் உயிரிழந்ததாகவும் பங்கஜ் மெஹ்ராவின் சகோதரி சபீனா போலீஸாரிடம் கூறியுள்ளார்.
முன்னதாக வடக்கு தில்லியில் சென்ற வருடம் மெஹ்ரா ஒரு ரெஸ்டாரண்ட் திறந்துள்ளார். ஆனால் அது நஷ்டம் அடைந்ததால் முடிவிட்டதாகக் கூறினார். இந்தக் காரணத்தையே தன் மனைவியைக் கொல்வதற்கான ஒரு காரணியாக அவர் வைத்துக் கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும் பங்கஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அந்தப் பெண்ணுடன் நிரந்தரமாக வாழ வேண்டுமென அவர் வற்புறுத்தியதால், பிரியாவை ‘காலி’ செய்ய அவர் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்திருப்பதாகவும் போலீஸார் விசாரணை முடிவில் தெரிவித்துள்ளனர்.
‘இரண்டாவது மனைவி’ கொடுத்த ப்ரஷர் காரணமாக தன் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு கணவர் ஒருவர் நாடகமாடிய சம்பவம் தில்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.