
டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் பிறப்பித்த உத்தரவுக்கு, தற்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.
தெரு நாய்களைக் கருத்தடை (Sterilization) மற்றும் தடுப்பூசி (Vaccination) செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.
டெல்லி தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும்படி இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்குப் பிராணிகள் விரும்பிகள் (Animal Lovers) மற்றும் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இவ்விவகாரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என அறிவித்தார்.
விசாரணையை மேற்கொண்ட இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவுக்குத் தடை விதித்து, அவற்றைச் சுற்றுப்புறப் பகுதிகளிலேயே விட்டுவிடலாம் எனப் பரிந்துரைத்தது. இந்த உத்தரவுக்கு நாய்ப் பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தத் தெருநாய் விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களும் இரண்டு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகிய மூன்று மட்டுமே பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன.
இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத காரணத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் வரும் 3ஆம் தேதி (அக்டோபர் 3) ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.