
Wife snake transformation story : உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி இரவில் பாம்பாக மாறி, தன்னை தூங்க விடாமல் செய்வதாக அந்த பெண்ணின் கணவன் போலீசில் புகார் அளித்தார். 'என் மனைவி இரவில் பாம்பாக மாறிவிடுகிறாள். என்னைப் பயமுறுத்துகிறாள், தூங்க விடாமல் தடுக்கிறாள். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள், என் மனைவியிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று போலீசில் அந்த நபர் புகார் கூறியிருந்தார்.
சீதாபூர் மாவட்டத்தின் மஹ்முதாபாத் தாலுகாவில் உள்ள லோதாசா கிராமத்தைச் சேர்ந்த மெராஜ் என்ற நபர் அளித்த இந்த புகாரைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். முதலில் அவர்களுக்கு சிரிப்பு வந்தாலும், ஊடகங்கள் முன்பும் தனது மனைவி பாம்பாக மாறுவதாக தெரிவித்தார். இதைக் கேட்ட போலீசார், விசாரணையைத் தொடங்கினர். அதில் தனது மனைவி இரவில் பாம்பு போல சீறுகிறாள், நாகப்பாம்பு போல நடந்துகொள்கிறாள். என்னைப் பயமுறுத்துகிறாள். தூங்க விடுவதில்லை' என்று அவர் கூறினார்.
போலீசார் இந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இருவரின் புகார்களையும் கேட்ட போலீசார், விசாரணை நடத்தியபோது வேறு ஒரு விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. சில நாட்களாக தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மனைவியை பயமுறுத்த, மெராஜ் வேறு திருமணம் செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். பணத்திற்காகவும் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த அந்த நபர், மனைவி தன் மீது புகார் அளித்துவிடுவாரோ என்ற அச்சத்தில், முன்கூட்டியே மனைவிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து தான் இந்த தன் மனைவி பாம்பாக மாறுகிறார் என்ற கதையை போலீசாரிடமும் மீடியாக்களிலும் தெரிவித்துள்ளார், பொய்க் கதையை உருவாக்கி போலீஸ் மற்றும் நிர்வாகத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மெராஜ் மீது வழக்குத் தொடரப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.