வேலைக்கே போகாத மனைவிக்கு ரூ.37.5 லட்சம் சம்பளம்! அரசு அதிகாரியின் தில்லுமுல்லு அம்பலம்!

Published : Oct 27, 2025, 04:04 PM IST
Rajasthan News

சுருக்கம்

ராஜஸ்தான் அரசு அதிகாரி ஒருவர், தனது மனைவிக்கு இரண்டு தனியார் நிறுவனங்களில் இருந்து வேலைக்குச் செல்லாமலேயே சுமார் ரூ. 37.5 லட்சம் சம்பளம் பெற்றுத் தந்துள்ளார். அரசு ஒப்பந்தங்களுக்கு ஈடாக இந்த ஊழல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி ஒருவரின் மனைவி ஒரு நாள் கூட வேலைக்குப் போகாமல் இரண்டு தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் ரூ. 37.5 லட்சம் சம்பளம் பெற்றுவந்தது அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தான் அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமமான 'ராஜ் காம்ப் இன்ஃபோ சர்வீசஸ்' (RajComp Info Services) நிறுவனத்தில் இணை இயக்குநராக (Joint Director) பணியாற்றி வருபவர் பிரத்யுமன் தீக்‌ஷித். இவர் தான் தன் மனைவிக்கு போலி பணி நியமனங்கள் மூலம் மாத வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

போலிப் பணி நியமனம் மூலம் ஊழல்

அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம், தனது மனைவி பூனம் தீக்‌ஷித் பெயரில் போலிப் பணி நியமனம் செய்து, அதன் மூலம் பிரத்யுமன் தீக்‌ஷித் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஓரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் (OrionPro Solutions) மற்றும் டிரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் (Treegen Software Ltd.) ஆகிய இரண்டு நிறுவனங்களும் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. இந்தக் கையூட்டுக்கு ஈடாக, தனது மனைவியைப் பணியில் அமர்த்தவும், அவருக்கு மாதாந்திர சம்பளம் வழங்கவும் இந்த நிறுவனங்களுக்கு தீக்‌ஷித் உத்தரவிட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 6 அன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) ஜூலை 3 அன்று இது குறித்து விசாரணையைத் தொடங்கியது.

உறுதியான ஆதாரங்கள்

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை, இந்த இரண்டு நிறுவனங்களும் பூனம் தீக்‌ஷித்தின் ஐந்து வங்கிக் கணக்குகளுக்குச் சம்பளமாக மொத்தம் ரூ. 37,54,405/- ஐ மாற்றியுள்ளன. இந்த காலகட்டத்தில் பூனம் தீக்‌ஷித், அந்த நிறுவனங்களின் அலுவலகத்திற்கு ஒரு நாள் கூட வரவில்லை என ஏ.சி.பி. உறுதி செய்துள்ளது.

தனது மனைவியின் போலி வருகைப் பதிவேடுகளை பிரத்யுமன் தீக்‌ஷித்தே அங்கீகரித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இரண்டு நிறுவனங்களில் சம்பளம்

பூனம் தீக்‌ஷித் ஓரியான்ப்ரோ சொல்யூஷனில் பணிபுரிவதாகக் கூறப்பட்ட அதே வேளையில், டிரீஜென் சாஃப்ட்வேர் நிறுவனத்திடமிருந்தும் 'ஃப்ரீலான்சிங்' என்ற பெயரில் ஒரே நேரத்தில் பணம் பெற்றுள்ளார்.

இந்த வழக்கை டி.எஸ்.பி. நீரஜ் குர்னானி தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!