மாமிச உணவுகளை ஒட்டல்களில் காட்சிப்படுத்தி விற்க தடை - 3 ஆண்டுகளாக அசைவ பிரியர்களுக்கு நேரும் சோகம்

First Published Dec 28, 2017, 8:04 PM IST
Highlights
South corporation order in the BJP party administration to ban the sale of meat dishes in hotels


இறைச்சி உணவுகளை ஓட்டல்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய தடை விதித்து பா.ஜனதா கட்சி நிர்வாகத்தில் உள்ள டெல்லி தெற்கு மாநகராட்சி உத்தரவிட்டதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் அசைவ உணவு குறிப்பாக மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்த கட்சி எடுத்து வருகிறது. 

அந்த கட்சியில் மத்திய அமைச்சர்களும், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பா.ஜனதா தலைவர்களும் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிராக சர்ச்சைக் குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஒருமுறை பேசியபோது,“ மாட்டிறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’’ என்று கூறி இருந்தார். 

இறைச்சிக்காக மாடுகளை விற்பனைச் செய்யத் தடைவிதித்து சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த உத்தரவு நாடுமுழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைப் பயன்படுத்தி வட மாநிலங்களில் பசு குண்டர்கள், மாடுகளைகொண்டு செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

அதன்பின் நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, அந்த உத்தரவை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு திரும்பப் பெற்றது. 

இந்நிலையில், டெல்லியில் உள்ள தெற்கு மாநகராட்சி நிர்வாகம், அதன் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஓட்டல்களில் அசைவ உணவுகளை, காட்சிப்படுத்தி விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்துள்ளது. 

தெற்கு டெல்லி மாநாகரட்சி பா.ஜனதா நிர்வாகத்தின் கீழ் வருகிறது. கடந்த 20ந்தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில் டெல்லி நஜாப்கார் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராஜ் தத் என்பவர் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதில், “ சீக் கபாப் இறைச்சி உணவுகள் சமைக்கப்பட்டு ஓட்டல்களில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது. மேலும், சைவ உணவு சாப்பிடுபவர்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்’’ என்று கொண்டு வந்தார்.இந்த தீர்மானத்துக்கு அவையின் தலைவர் சிகா ராய் ஒப்புதல் அளித்துவிட்டார். 

ஆனால், தெற்கு டெல்லி மாநகராட்சி ஆணையர் பி.கே. கோயல் இன்னும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஏனென்றால், இந்த தீர்மானம்,டெல்லி மாநகராட்சி சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை அவர் ஆய்வுசெய்து அறிக்கை அளித்தபின் இது அமலாகும். 

தெற்கு டெல்லியில் கிரேட்டர் கைலாஷ், லஜ்பத் நகர், ஹாஸ் காஸ், டிபன்ஸ் காலனி, நியூ பிரண்ட்ஸ் காலனி ஆகியவற்றில் காணப்படும் ஓட்டல்களில் இறைச்சி உணவுகள் காட்சி படுத்தப்பட்டு அதிகம் விற்பனையாகிறது. இந்த தீர்மானத்தின் மீதான அடுத்த முடிவு ஜனவரி 3ந்தேதி எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 3½ ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் அசைவ உணவுகளுக்கு மத்திய அரசு தடை போட்டுவந்துள்ளது அது குறித்த பார்வை.

ஏர் இந்தியா விமானத்தில் ‘தடா’

ஏர் இந்தியா விமானத்தில் ‘எக்கானமி’ வகுப்பு பிரிவில்பயணிக்கும் பயணிகளுக்கு அசை-உணவு வழங்கப்படாது என கடந்த ஜூலை மாதம் அரசு அறிவித்தது. இதன் மூலம் செலவை குறைக்க முடியும், ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை சேமிக்க முடியும் என்று அரசு விளக்கம் அளித்தது. 

மாட்டிறைச்சி பிரியானிக்கு தடை

அரியானா மாவட்டம், மேவாட் மாவட்டத்தில் சிலஓட்டல்களில் மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு மூடப்பட்டன. அந்த ஓட்டல்களில் பசு இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து, மாட்டிறைச்சி விற்பனை செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக மாற்றி 2015ம்ஆண்டு சட்டம் இயற்றியது. 

சென்னை ஐ.ஐ.டி.யில் ‘சமையல்’

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யதடையை மத்திய அரசு கடந்த மே மாதம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே28ந்தேதி சென்னை, ஐ.ஐ.டி. வளாகத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாட்டிறைச்சி சமைத்து உண்டனர். மேலும், ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலையிலும் மாணவர்கள் மாட்டிறைச்சி சமைத்து உண்டனர். இதனால், பலர் கைது செய்யப்பட்டனர். 

குஜராத்தில் கடும் சட்டம்

குஜராத் மாநிலத்தில் பசுவதையை தடுக்கும் வகையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் அவையில் இல்லாத நிலையில் இது நிறைவேறியது. 

30 சதவீதம் மட்டுமே சைவம்

சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டன் பேஸ்லைன் சர்வே 2014 ஆய்வின்படி, நாட்டில் 30 சதவீதம் மக்கள் மட்டுமே சைவம் சாப்பிடுபவர்கள். மீதமுள்ள 70 சதவீதம் மக்கள் அசைவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!