
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் வாக்களிக்கும் இத் தேர்தலில் இதுவரை வேட்பாளர் எவரும் முன்னிறுத்தப்படவில்லை..
இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் இணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் நிதிஷ்குமார், சரத்யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரை இதுவரை சோனியா சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், தேசிய மாநாடு கட்சியின் பரூக் அப்துல்லா ஆகியோரிடம் சோனியா நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே டெல்லி சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் சோனியாகாந்தியை இன்று சந்தித்து பேசினார். அப்போது பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.