
கேரள போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சென்குமாருக்கு மீண்டும் பணி வழங்காமல் தாமதம் செய்த கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் சென்குமார். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும், கோவில் வெடி விபத்தை தடுக்க தவறி விட்டதாகவும் சென்குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் சென்குமார் டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்குமாருக்கு மீண்டும் பதவி வழங்க கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை கேரளா தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்தும், சென்குமாருக்கு கேரள அரசு மீண்டும் பணி வழங்காமல் இழுத்தடித்து வந்தது.
இதைத்தொடர்ந்து கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் சென்குமார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த 29-ந்தேதி தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
கேரள அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், சென்குமார் கேரள போலீசின் ஒட்டுமொத்த தலைமை அதிகாரியாக பணியாற்றவில்லை என்றும் போலீஸ் படையின் தலைமை அதிகாரியாக மட்டுமே இருந்தார் என்றும் வாதிட்டார். ஆனால் இந்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தாங்கள் உத்தரவிட்டும் சென்குமாருக்கு ஏன் பதவி வழங்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து கேரள மாநில தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை கேரள அரசு நிறைவேற்ற மறுப்பது இந்த வழக்கில் கேரள அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவது போல் இருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும் கேரள அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்த நீதிபதிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.