
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) கூட்ட கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் தேர்தலுக்கு பின் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன. ஏனென்றால், தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவி ஆட்சியைப் பிடிக்கமுடியாமல்போனால், ராகுல் காந்தி மீது காரணம் திரும்பிவிடக்கூடாது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை தொடங்கும் செயற்குழுக்கூட்டத்தில், குஜராத் தேர்தலுக்கு முன்பே தலைவர் பதவியை ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தேசிய செயற்குழுக் கூட்டத்தை கூட்ட தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இதுவரை ராகுல்காந்திக்கு எதிராக எந்த தலைவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்பதால், அவரே தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
டிசம்பர் 31-ந்தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், குஜராத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக பதவி ஏற்க தயார் என்று மக்களிடத்தில் கூறி வருகிறார் என்பதால், நாளை நடக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.