
தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான அனைத்து கார்டுகள் தயாராகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணி தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த கார்டுகள் மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளது. அதன்பின், இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் கார்டை ரேஷன் கடையில் உள்ள பாயின்ட் ஆப் சேல் மெஷின் மூலம் ‘ஸ்வைப்’ செய்து ரேஷன் பொருட்களைப் பெற முடியும். தான் வாங்கிய பொருட்களின் விபரங்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்த தொலை பேசி எண்ணுக்கு வந்துவிடும்.
உணவுத்துறை அலுவலகத்திலும் பதிவாகும். மேலும், ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்தும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.