
உத்தரப்பிரதேசம் என்பது மிகப்பெரிய மாநிலம், கோரக்பூர் மடத்தைப் போல் எளிதாக நிர்வகித்துவிட முடியாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தைசிவேசேனா கட்சி கிண்டல் செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் சிவசேனா கட்சி அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த மோதல் போக்கு இப்போது உத்தரப்பிரதேசம் வரை நீண்டுவிட்டது.
சிவசேனாகட்சி தனது நாளேடான ‘சாம்னா’ வில் உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வர் யோகி ஆதித்ய நாத் குறித்து தலையங்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
உத்தரப்பிரதேசம் மிகப்பெரிய மாநிலம் அதை நிர்வாகம் செய்வது மடத்தைப் போல் எளிதான காரியம் இல்லை. மாநிலத்துக்கு இரு துணை முதல்வர்கள் வேறு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இனி மேல், முதல்வர் ஆதித்ய நாத் தனது பூஜை மற்றும் மதரீதியான காரியங்களை சுதந்திரமாக கவனிக்கலாம். இதற்காகத்தானே இரு துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மஹாராஷ்டிராவில் இது போல் துணை முதல்வர் நியமிக்க வேண்டும் என்று கேட்ட போது, துணை முதல்வர் என்பது கொள்கைக்கு விரோதமானது என்றுபாரதிய ஜனதா கட்சி அப்போது கூறியது. இப்போது அந்த கட்சி உத்தரப்பிரதேசத்தில் இரு துணை முதல்வர்களை நியமித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, துணை முதல்வர் பதவியை பா.ஜனதா பெற்று இருக்கிறது.
முதல்வர் ஆதித்யநாத், தனது மதரீதியான கடமைகளை செய்வதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மாநிலத்தின் நிர்வாகத்திலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும்.
முதல்வராக ஆதித்ய நாத் நியமிக்கப்பட்டு இருப்பது, ராமர் கோயில் கட்டும் திட்டத்தை விரைவு படுத்தும் என்று நினைக்கிறோம், இந்துத்துவ சக்திகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்.அதே சமயம், மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
மத்தியப்பிரதேசத்தில் இதேபோல் உமா பாரதி முதல்வராக இருந்தபோது, நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மதரீதியான காரியங்களில் அதிகமாக கவனம் செலுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.