
ஜம்மு காஷ்மீரில பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பபட்டனர். சண்டையின்போது, விமானப்படையை சேர்ந்த கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சதி செய்யும் பாக்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர கிராம மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு அங்கிருக்கும் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து நாச வேலையில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டின் உளவு அமைப்பும் ஈடுபட்டுள்ளன.
உளவுத்துறை தகவல்
இதனை முறியடிப்பதற்காக காஷ்மீரில் போலீசார், துணை ராணுவம் மற்றும் கமாண்டோ வீரர்கள் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தின் சந்தர் கீர் என்ற கிராமத்தில் தீவிராவதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிரவாதிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாலையில் ஆரம்பம்
அவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்ற மற்றொரு தகவலும் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை சந்தர்கீர் கிராமத்தில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். மாலை 5.50-க்கு பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் முதற்கட்டமாக 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையின்போது படுகாயம் அடைந்த இந்திய விமானப்படையின் கமாண்டோ வீரர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்கவுன்ட்டர் நடந்து கொண்டிருக்கும்போதே, மொபைல் சேவைகள் அனைத்தும் சுற்று வட்டாரத்தில் துண்டிக்கப்பட்டன.
ஆயுதங்கள் பறிமுதல்
இறுதியாக மாலை 7 மணிக்கு 6-வது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஜகியுர் ரஹ்மான் லக்வி மூளையாக செயல்பட்டார். நேற்று நடந்த தாக்குதலின்போது அவருடைய உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஏராளமான வெடி பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெற்றிகரமாக என்கவுன்ட்டரை நடத்தி முடித்ததற்காக பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீர் மாநில டிஜிபி வாழ்த்துக் கூறியுள்ளார்.