காஷ்மீரில் ஆர்காம் என்ற கிராமத்தில் சிராஜுதின் கான் என்ற இளைஞர் வீட்டுக்கு வீடு நூலகம் அமைத்து கொடுத்துவருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தை சேர்ந்த சிராஜுதின் கான் என்ற 26 வயது இளைஞர், புனேவில் உள்ள சர்ஹாத் ஃபௌண்டேஷனில் வளர்ந்தவர். தீவிரவாதத்தால் குடும்பங்களை இழந்த காஷ்மீர் சிறுவர், சிறுமியரை வளர்ப்பதற்காக சஞ்சய் நஹர் என்பவர் தொடங்கிய சர்ஹாத் ஃபௌண்டேஷனில் தான் சிராஜுதின் கான் வளர்ந்தார்.
வரலாறு பாடப்பிரிவில் பிஎச்.டி செய்துவரும் சிராஜுதின் கான், புத்தகங்கள் மட்டுமே மக்களின் அறிவுக்கண்ணை திறக்கும் என்பதால், அவரது கிராம மக்கள், மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க நினைத்தார்.
இங்கிலாந்தில் புத்தக கிராமம் என்று ஒரு மாடல் இருப்பதை தெரிந்துகொண்ட சிராஜுதின் கான், மகாராஷ்டிராவிலும் பெல்லார் என்ற ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் நூலகம் இருப்பதை தெரிந்துகொள்கிறார். அதேபோல், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்காம் என்ற 100 வீடுகளை மட்டுமே கொண்ட தனது கிராமத்திலும் வீட்டுக்கு வீடு நூலகம் அமைக்கும் பணிகளை தொடங்கி மேற்கொண்டுவருகிறார்.
சிராஜுதின் கானின் உயர்ந்த நோக்கத்திற்கு நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் காஷ்மீர் அரசு ஆதரவு அளித்து உதவுகிறது. தனது சொந்த முயற்சியால் ஆர்காம் கிராமத்தில் உள்ள 100 வீடுகளில் 22 வீடுகளில் இதுவரை நூலகத்தை அமைத்து சாதித்திருக்கிறார் சிராஜுதின் கான். எஞ்சிய 78 வீடுகளிலும் நூலகங்களை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது விஷயம் சார்ந்த புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருக்கும். அனைவரும் பரஸ்பரம் புத்தகங்களை பரிமாறி, தங்களுக்கு தேவையானவற்றை படித்துக்கொள்ளலாம்.
இந்தியாவை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய விவகாரம்: சுவிஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்தியா
இதன்மூலம் மக்களின் அறிவுக்கண்ணை திறப்பதுடன், மக்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும். சிராஜுதின் கானின் இந்த முயற்சி இந்தியா முழுவதும் காட்டுத்தீயாய் பரவி, இந்த மிகச்சிறந்த முன்னெடுப்பு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.