சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது
வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில், சிக்கி ஏராளமானோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 10 ராணுவ வீரர்களின் உடல்கள் உட்பட 34 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 105 க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்கிறது என்றும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ராணுவ வீரர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சிக்கிம் மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய விமானப்படை தொடங்கியுள்ளது. லாச்சனில் இருந்து வடக்கு சிக்கிமில் உள்ள மங்கனுக்கு விமானம் மூலம் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை முதற்கட்டமாக விமானப்படையினர் மீட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் விபி பதக், சிக்கிம் தலைநகர் காங்டாக் சென்றுள்ள ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஆயுதப் படைகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
சிக்கிமில் பதிவான 34 இறப்புகளைத் தவிர, மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகம், டீஸ்டா ஆற்றின் கீழ் பகுதியில் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இரு மாநிலங்கள் அறிவித்துள்ள எண்ணிக்கையில் சில ஒற்றுமைகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிமில், பாக்யோங் மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 ராணுவ வீரர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், காங்டாக்கில் 6 பேர், மங்கனில் 4 பேர் மற்றும் நாம்ச்சியில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்கன் மாவட்டத்தில் உள்ள லோனாக் ஏரியின் மீது ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள நதிப் படுகையில் உள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களில் 105 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்றி அதிகமாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் எப்போது: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
காணாமல் போனவர்களில் 63 பேர் பாக்கியோங்கைச் சேர்ந்தவர்கள், 20 பேர் காங்டாக்கைச் சேர்ந்தவர்கள், 16 பேர் மாங்கனைச் சேர்ந்தவர்கள் மற்றும் 6 பேர் நாம்ச்சியைச் சேர்ந்தவர்கள் என்று சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக மொத்தம் 3,432 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5,327 பேர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தில் சாலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. 6,505 பேர் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் நான்கு மாவட்டங்களில் உள்ள 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,870 ஆக உள்ளது.