ஜம்மு - காஷ்மீர் தேர்தல் எப்போது நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானின் நவம்பர் 23ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
undefined
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் எப்போது நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பாதுகாப்பு நிலைமை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் பிற தேர்தல்களை மனதில் கொண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சரியான நேரம் என்று தேர்தல் ஆணையம் கருதும்போது தேர்தல் நடத்தப்படும்.” என்றார்.
நாளை மறுநாள் வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணி கணிசமாக முடிந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது சட்டப்பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்த மத்திய பாஜக அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியர் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக 2014ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஃப்தி முகமது சையத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. 2016ஆம் ஆண்டில் முஃப்தி முகமது சையத் காலமானதால் கூட்டணியில் குழப்பம் நிலவியது.
இருப்பினும், மெஹபூபா முஃப்தி தலைமையில் மீண்டும் அதே கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2018ஆம் ஆண்டில் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. இதனால், மெஹபூபா முஃப்தி அரசு கவிழ்ந்தது. அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதையடுத்து, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை ரத்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆளும் மத்திய பாஜக அரசு பிரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.