லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: கொதித்து எழுந்த சீக்கியர்கள் டெல்லியில் போராட்டம்

By SG Balan  |  First Published Mar 20, 2023, 8:36 PM IST

ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இந்தியத் தூதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் சீக்கியர்கள் பிரிட்டன் தூதரகம் முன்பு கூடி கண்டனம் தெரிவித்தனர்.


பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கியர்கள் பலர் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் இந்திய தேசியக் கொடியையும் பதாகைகளையும் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 'இந்தியா நம் பெருமை' என்று கோஷமிட்ட அவர்கள், தேசியக் கொடியை அவமதிப்பதை பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் சூழலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டிருக்கிறது.  தூதரகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு பறந்துகொண்டிருந்த மூவர்ணக் கொடியை இறக்க முயற்சித்தனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் இந்திய தேசியக் கொடி தற்போது தூதரகத்தில் கம்பீரமாகப் பறந்துகொண்டிருக்கிறது என்றும் லண்டன் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்தபோது அவர்களைத் தடுக்க முயன்ற இரண்டு பாதுகாப்பு ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இது போன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது என்று கண்டித்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் எனவும் உறுதி அளித்துள்ளனர். இச்சூழலில் அமெரிக்காவிலும் இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் (Sikhs for Justice) என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, 'பொதுவாக்கெடுப்பு 2020'க்கு அழைப்பு விடுத்துள்ளது.

click me!