ராஜினாமா வாபஸ்… முடிவை மாற்றிக்கொண்ட நவஜோத் சிங் சித்து!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 7:00 PM IST
Highlights

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவஜோத் சிங் சித்து கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அதனை தற்போது திரும்ப பெற்றுள்ளார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தொடர உள்ளதாகவும் புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும்போது தான் பொறுப்பேற்கப்போவதாகவும் நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.  இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது.  இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை கட்சி மேலிடம் நியமித்தது. அடுத்த சில மாதங்களிலேயே முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சித்துவின் ஆதரவாளராக அறியப்படும் அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி திடீரென யாரும் எதிர்பாரா விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்கிரசில் சேவையாற்றப் போவதாகவும் சித்து திடீரென அறிவித்தார். இதுக்குறித்த தனது ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் மாநில நலனில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. என்றும் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், தொண்டராக கட்சியில் தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும், காங்கிரஸ் மேலிடம் இந்த ராஜினாமாவை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. சித்துவே காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்றும் கட்சி மேலிடம் கூறியிருந்தது. இதனிடையே சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவருடன் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசில் அடுத்தடுத்த நிகழ்ந்த இச்சம்பவங்களால் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தொடர உள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், புதிய அட்டர்னி ஜெனரல் நியமிக்கப்படும்போது தான் பொறுப்பேற்கப்போவதாகவும் புதிய அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படும் நாளில் புதிய குழுவும் அமைக்கப்படும்  என்று திட்டவட்டமாக கூறிக்கொள்கிவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் ராஜினாமா செய்தது தனிப்பட்ட ஈகோ கிடையாது என்றும் பஞ்சாப் மக்களின் நலனுக்கானது என்றும் விளக்கமளித்தார். இதனால் பஞ்சாப்பில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நவஜோத் சிங் சித்து கட்சி தலைமைக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றதும் மீண்டும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளதும் பஞ்சாப் அரசியலில் இருக்கும் பரபரப்பை சற்று குறைத்துள்ளது. 

click me!