கேராளாவில் 2 நாட்கள் பஸ் ஸ்ரைக்… ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மக்கள்!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 2:36 PM IST
Highlights

கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கேரளாவில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த திடீர் வேலைநிறுத்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுமட்டுமின்றி இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்தி வைத்துள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) திகழ்கிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மறுவரையறை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி கேரள அரசுடன் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த மூன்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்று நள்ளிரவு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. INTUC - TDF தொழிற்சங்கமான அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இடதுசாரி தொழிற்சங்கங்கள், BMS ஆகியவை 24 மணி நேர போராட்டத்தை அறிவித்துள்ளன. இதுபற்றி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ பேசுகையில், ஊழியர்களின் சம்பளத்தை மறுவரையறை செய்ய அரசு தயாராகி உள்ளதாகவு இதற்காக கூடுதலாக 30 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தார். மேலும் இதனை நடைமுறைப்படுத்த சில காலம் ஆகும் என்று கூறிய அவர், அதுவரை பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தொழிற்சங்கத்தினர் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுக்குறித்து தொழிற்சங்கத்தினர் தரப்பு கூறுகையில், சம்பளம் மறுவரையறை செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்து ஐந்து மாதங்களுக்கும் மேலாவதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் இன்றும், நாளையும் அரசு பேருந்து சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் போராட்டத்தில் ஈடுபடும் நாட்களுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது. கேரள மாநிலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் கேரள மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கேரளாவிற்கு வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மக்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பஸ் ஸ்டிரைக் காரணமாக, இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் ஒத்தி வைத்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த திடீர் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!