ஆதி சங்கரர் சிலை... 130 கோடி நலத்திட்டங்கள்... தேர்தல் வரப்போகும் உத்தரகாண்டில் மோடி...

By Ganesh RamachandranFirst Published Nov 5, 2021, 11:16 AM IST
Highlights

தேர்தலை எதிர்நோக்கியுள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று ராணூவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடிய அவர், இன்று ஆதி சங்கரர் சிலையை திறந்துவைத்து, 130 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

இந்துக்களின் மிக முக்கியமான புண்ணியத்தலங்களில் ஒன்றான கேதார்நாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். உத்தராகண்டில் உள்ள கேதார்நாத் சிவன் ஆலயம் உலகின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். கேதார்நாத் யாத்திரை இந்துக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். புத்த, ஜைன மதங்கள் வளரத்தொடங்கிய காலத்தில், 7ம் நூற்றாண்டில் சைவ சமயத்தை இந்தியா முழுவதும் பயணித்து காத்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதி கேதார்நாத்தில் தான் அமைந்துள்ளது.

கேதார்நாத் ஆதி சங்கராச்சாரியார் சமாதி

கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சமாதி மற்றும் சிலை சேதமடைந்தது. ரூபாய் 500 கோடி செலவில் சமாதியை புனரமைத்து, அருகே புதிய ஆதி சங்கரர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கவனமாக மேற்பார்வையிட்டதாகவும், கேதார்நாத் அவரது மனதுக்கு நெருக்கமான இடம் என்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி தெரிவித்தார்.

புதிய ஆதி சங்கரர் சிலை முன்பு பிரதமர் மோடி

ஜி-20 மாநாடு உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு உத்தரகாண்ட் சென்றுள்ள பிரதமர், அங்கு ராணுவ வீரர்களுடன் நேற்று தீபாவளியைக் கொண்டாடினார். பின்னர் இன்று காலை கேதார்நாத் சென்ற மோடி, அங்கு புனரமைக்கப்பட்ட ஆதி சங்கரர் சமாதி, புதிதாக அமைக்கப்பட்ட ஆதி சங்கரர் சிலை ஆகியவற்றைத் திறந்துவைத்தார். பின்னர் சிலை முன்பு அமர்ந்து தியானம் செய்த பிரதமர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 130 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான முதலுதவி மையம், தங்கும் விடுதிகள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் தங்கும் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றினார்.

இன்று திறந்து வைக்கப்பட்ட 12 அடி உயர ஆதிசங்கரர் சிலை, 35 டன் எடை கொண்டதாகும். கர்நாடக மாநிலம் மைசுருவில் சிற்பி யோகிராஜ் என்பவர் இந்த சிலையை செதுக்கியுள்ளார். 120 டன் கல்லைக்கொண்டு 2020ம் ஆண்டு முதல் பணி செய்து சிலையை உருவாக்கியுள்ளார். முன்னதாக, விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்கமாக பிரதமர் கேதார்நாத் சென்றார். பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியா திரும்பி, ராணுவ வீரர்களுடன் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் என்பது நினைவுகூறத்தக்கது.

click me!