அடிதூள்.. நாட்டு மக்களுக்கு மோடி அரசின் தீபாவளி பரிசு.. லிட்டருக்கு பெட்ரோல் ரூ5, டீசல் ரூ10 அதிரடி குறைப்பு!

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 8:55 PM IST
Highlights

 "டீசல் விலை குறையும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மாநில அரசுகளும் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 தீபாவளி பரிசாக நாட்டு மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போதைய நிலையில் பெட்ரோல் லிட்டர் ரூ.106 வரையிலும் டீசல் விலை ரூ.102 வரையிலும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய, மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் பொறுப்பு உண்டு. அதன்படி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க சில வேளைகளில் மாநில அரசுகள் முடிந்தவரை விற்பனை வரியைக் குறைத்திருக்கின்றன. அண்மையில் தமிழக அரசுகூட பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3-ஐ குறைத்தது.

எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பெட்ரோல், டீசலுக்கு விதிக்கும் கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு தீபாவளி திருநாளான நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தீபாவளி பரிசாக இதை அறிவித்திருக்கிறது.

பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “விரைவில் ராபி பருவம் தொடங்க உள்ளது. டீசல் விலையைக் குறைப்பதன்மூலம் விவசாய இடுபொருட்களின் விலையும் குறையும். மேலும் டீசல் விலை குறையும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மாநில அரசுகளும் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளன.

click me!