உலக அரங்கத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா… கிடைத்தது கோவாக்சினுக்கு அனுமதி!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 6:52 PM IST
Highlights

பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்னும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில் மாடர்னா, கோவிஷீல்ட், ஃபைசர் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு வேக்சின்களுக்கு உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சினுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் கோவாக்சின் தயாரிக்கப்பட்டு உலக சுகாதார மையத்தின் அவசர அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அவசர அனுமதிக்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால் உலக சுகாதார மையம் கடந்த 8 மாதங்களாக கோவாக்சினுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதுவரை கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக 4 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் அதில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அனுமதி வழங்காததற்கு காரணமாக கோவாக்சின் குறித்த தகவல்கள் போதிய அளவில் இல்லை எனவும் கூடுதல் தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. மேலும் கூட்தல் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டிருந்தது.

இதையடுத்து பாரத் பயோடெக் கோவாக்சின் குறித்த கூடுதல் தகவல்களை உலக சுகாதார மையத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து இன்று கோவாக்சினுக்கு அனுமதி தருவது தொடர்பாக நடைபெற்ற ஐந்தாவது ஆலோசனையில், உலக சுகாதார மையம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளித்தது. அனைத்து தரவுகளும் தகவல்களும் வழங்கப்பட்ட காரணத்தால் கோவக்சினுக்கு அவசர அனுமதி அளித்து உலக சுகாதார மையம் உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார மையம் அனுமதி வழங்கினால் மட்டுமே மற்ற நாடுகள் அதனை தங்கள் நாடுகளில் அனுமதிக்கும். அதுமட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்றால் மட்டுமே விசா பெறுவது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது போன்ற நடைமுறைகளை செயல்படுத்த முடியும் என்ற நிலையில் தற்போது கோவக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் உலக நாடுகள் இந்த கோவாக்சினை அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அனுமதி மூலம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விசா பெறுவது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது போன்ற நடைமுறைகளை செயல்படுத்த முடியும் என தெரிகிறது. இதுவரை நடத்தப்பட்ட மனித சோதனைகளில் கோவக்சினுக்கு 77.8% நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும், டெல்டாவிற்கு எதிராக 65.2% எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!