மின்வாகனத்திற்கு 3 வருடங்களில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள்… இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி!!

By Narendran SFirst Published Nov 3, 2021, 5:15 PM IST
Highlights

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அடுத்த 3 வருடங்களில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் கவனம் மின்சார வாகனங்கள் நோக்கி செல்கிறது. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதும் தற்போது அதிகரித்துள்ளது. இயற்கை எரிபொருள் வாகனங்கள், கலப்பின எரிபொருள் வாகனங்கள் ஆகியவை சேர்ந்து பதிவு செய்யப்படுவதை காட்டிலும் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக அலுவலர்களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் திட்டங்களைக் குறைந்த செலவில் உருவாக்குவது, தரமானசார்ஜர் மையங்கள் அமைப்பது, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க புதிய சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், மின்சார வாகனம் வாங்குவோருக்கு, வாகனத்தின் மொத்த விலையில் 40 சதவீதம் வரை கணக்கிட்டு ஒரு கிலோவாட் பேட்டரிக்கு ரூ.15 ஆயிரம் என மத்திய அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே எரிபொருளை குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மற்றொருபுறம் பேட்டரி, சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு மானியம் வழங்குவது குறித்து தமிழக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனிடையே சுற்றுச்சூழலை மனதில்கொண்டு பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனப்பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்தியாவும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் எஸ்.எம் வைத்யா,  அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களும், அடுத்த ஒரு வருடத்தில் 2000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், 2 வருடங்களில் 8000 சார்ஜிங் ஸ்டேஷன்களும், மூன்று வருடங்களில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் என படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் சார்ஜிங் ஸ்டேஷன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்து இருக்கக்கூடியவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தொலைதூரம் பயணிக்க முடியும் எனவும், ஒட்டுமொத்த நாட்டில் கார்பன் வெளியேற்றம் என்பது மிகப்பெரிய அளவில் குறையும் எனவும் எஸ்.எம் வைத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசு சில மாதங்களுக்குமுன் டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நாடு முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் அரசால் நடத்தப்படக்கூடிய ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் டாடா பவர் நிறுவனத்துடன் கைகோர்த்து நாட்டின் சிறுசிறு நகரங்களை இணைக்கக்கூடிய வகையில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களில் அமைக்கக்கூடிய பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவிக்கும் வாகன விற்பனையாளர்கள், விரைவில் மக்கள் அச்சமின்றி மின்சார வாகனத்தில் நீண்ட தூரம் தைரியமாக பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.

click me!