உலகை வியக்க வைத்துள்ளது இந்திய கலாச்சாரம்… பெருமிதம் தெரிவிக்கும் பிரதமர் மோடி!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 1:50 PM IST
Highlights

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் ஆதி சங்கரரின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவின் கலாச்சாரபெருமையை உலகம் வியந்து பார்ப்பதாக  தெரிவித்தார்.

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். அதனை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, நேற்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலம் சென்ற அவர், கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே பலமுறை அங்கு சென்ற மோடி, தற்போது 5வது முறையாக கேதார்நாத்தில் சாமி தரிசனம் நடத்தினார். பின்னர் கேதார்நாத்தில் 2013 ஆம் ஆண்டு மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆதி சங்கரரின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கேதார்நாத் கோவில் வளாகத்தில் 12 அடியிலான ஆதி சங்கரர் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

பின்னர் சிலை முன்பு அமர்ந்து தியானம் செய்த பிரதமர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 130 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான முதலுதவி மையம், தங்கும் விடுதிகள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் தங்கும் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் கலாச்சாரபெருமையை உலகம் வியந்து பார்ப்பதாகவும் புத்தகயா உள்ளிட்ட ஆண்மிக தலங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்ப்பதாகவும் தெரிவித்தார். சமூதாய நலனுக்காக ஆதி சங்கரர் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டதாக கூறிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த சிலை கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையும் உடையது. இந்த சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கி உள்ளார். இந்த சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டு, 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும் பணி துவங்கியது. 

உத்தரகண்டில் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்தது. கோயில் அருகே இருந்த ஆதி சங்கர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். மந்தாகினி ஆற்றில் பாலம், புரோகிதர்களுக்கான வீடுகள், மந்தாகினி ஆற்றில் தடுப்புச் சுவர், விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி கேதார்நாத் வருகையையொட்டி கேதார்நாத் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கோவிலில் மகா ருத்ரா அபிஷேகம் செய்து தேச நலனுக்காக பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.

 

 

click me!