சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம்… திருப்தி அடைந்த இல்லத்தரசிகள்!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 6:20 PM IST
Highlights

சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. 

சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. கொரோனாவை தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்ந்தது. எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக சந்தை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் பொருட்களின் விலைகளும் வரலாறு காரணாத  அதிகரித்து வருவது பொதுமக்களிடையே, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 21 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 முதல் 15 மில்லியன் டன் எண்ணெய்ப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவிற்கு அடுத்து உலக அளவில் சமையல் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. பாமாயில் தான் இந்தியா முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்கு நேரடியாக பயன்படுத்தும் வகையில் சுத்தகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மலேசியா, ப்ரேசில், அர்ஜெண்டினா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணேய் சந்தை சர்வதேச எண்ணேய் சந்தைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச காரணங்களால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தபடியே இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180ஐ எட்டியுள்ளது. பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டருக்கு ரூ. 130 முதல்  ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது. அந்த வகையில் நேற்று பெட்ரோல், டீசல் விலைக்கான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அதனை தொடர்ந்து இன்று சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கவரி 2.5% -ஐ முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  2022 ஆம் ஆண்டு உ.பி., பஞ்சாப், ஹிமாச்சல், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் வர உள்ளதால், எண்ணை பொருட்களின் விலை உயர்வு தேர்தலில்  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எண்ணிய மத்தியஅரசு, தற்போது எண்ணை பொருட்களின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே  இறக்குமதிக்கான சுங்கவரியை படிப்படியாக குறைத்து வந்தது  மட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை அக்ரி செஸ் வரியையும் குறைத்துள்ளது. மேலும் எண்ணெய்ப் பொருட்களின் விலையை குறைக்க எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பொருட்களின் சேமிப்பு வரம்பை மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!