அபிநந்தனின் காலில் துப்பாக்கி சூடு... ஆவணங்களை மறைக்க முயன்றபோது நடந்த கொடூரம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2019, 12:55 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்குவதற்கு முன் விமானி அபிநந்தன், இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாகவும் துரத்தியவர்களிடம் இருந்து தப்பிக்க வானில் சுட்டுக்கொண்டே ஓடியபோது அவரது பாகிஸ்தானியர்கள் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்குவதற்கு முன் விமானி அபிநந்தன், இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாகவும் துரத்தியவர்களிடம் இருந்து தப்பிக்க வானில் சுட்டுக்கொண்டே ஓடியபோது அவரது பாகிஸ்தானியர்கள் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக்-21 ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். அப்போது அவரை பாக்., ராணுவ வீரர்களும், பொதுமக்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். ரத்தம் முகத்தில் சொட்டச்சொட்ட கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்களை கட்டி அபிநந்தன் அழைத்துச் செல்லப்படும் வீடியோ பார்த்தவர்களின் நெஞ்சங்களை பதற வைத்தது.

 

விங் கமாண்டர் அபிநந்தனின் தைரியம் குறித்து பாகிஸ்தான் இதழான 'டான்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ’’முகமது ரசாக் சவுத்ரி என்பவர் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்துள்ளார். ஒரு விமானம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்துள்ளது. மற்றொரு விமானம் வெடித்தபோது, அதிலிருந்து பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன். துப்பாக்கியுடன் இருந்த அபிநந்தன், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என உரக்கக் கேட்டுள்ளார். அவர்கள் இது இந்தியா எனக் கூறி ஏமாற்றி உள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து அபிநந்தன் குரல் எழுப்பி உள்ளார். அங்கிருந்தவர்களிடம் தனக்கு முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்தியாவை ஆதரித்து பேசியதால் அங்கிருந்த பாகிஸ்தான் இளைஞர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. கீழே கிடந்த கற்களை எடுத்து, அபிநந்தனைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட அபிநந்தன் வானை நோக்கி சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். ஆனால், தான் துரத்தப்படுவதை உணர்ந்த அவர், அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்துள்ளார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடிக்க முயற்சி செய்துள்ளார். 
 
அப்போது துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டுள்ளார். கீழே சரிந்த அபிநந்தனை சூழ்ந்துகொண்டு மற்றவர்களும் தாக்கியுள்ளனர். அதன்பிறகு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே இணையத்தில் வைரலானது. இதுவரை தனது  பெயர், பதவி, ஊர், மதம் தவிர வேறெதையும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பகிரவில்லை. அபிநந்தனின் வீரத்தையும், மன உறுதியையும் இந்திய மக்கள் பாராட்டி வருகின்றனர். 

click me!