2024 தேர்தல்... கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள்? உற்சாகத்தில் பாஜக!

By Manikanda PrabuFirst Published Jun 7, 2023, 2:55 PM IST
Highlights

பாஜக கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை  தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதற்கான பணிகளை கடந்த ஆண்டே பாஜக தொடங்கி விட்டது. திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவலகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் மற்றும் ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள்தான் அவை. இந்த இரண்டு கட்சிகளுமே பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள்தான்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் இருந்த சிரோமணி அகாலி தளம், 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் கொந்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் அம்மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பாஜகவுடனான கூட்டணி தேர்தலில் எதிரொலித்து விடுமோ என்ற அச்சத்தில் சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து விலகியது. தேர்தலை தனித்து எதிர்கொண்டாலும், அக்கட்சி தோல்வியையே சந்தித்தது. காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, பஞ்சாப் அரியணையை ஆம் ஆத்மி பிடித்துக் கொண்டது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகியவை எதிர்க்கட்சிகளாக இருக்கும் நிலையில், அண்மைக்காலமாகவே மத்திய அரசுக்கு எதிரான முடிவுகளை சிரோமணி அகாலி தளம் எடுத்து வந்தது. இதனால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சேர அக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்த அக்கட்சி, தற்போது பாஜகவுடனான கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் காட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மஹேஷிந்தர்சிங் கிரிவால் கூறுகையில், “ஆப்ரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை காரணமாக எங்களால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சேர முடியாது. கூட்டணிக் கட்சிக்கு பாஜக உரிய மரியாதை அளிக்க முன்வந்தால், அரசியலில் எதுவும் சாத்தியம்.” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக பிரிக்கக் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயில் 1984ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பொற்கோயிலுக்குள் புகுந்து பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். இதற்கு ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என பெயரிடப்பட்டிருந்தது. சீக்கியர்கள் இடையே பெரும் துயர சம்பவமாக மாறிப்போன இந்த நடவடிக்கையின் நினைவு நாளான நேற்று சிரோமணி அகாலி தளம் பாஜகவுக்கான தனது கதவை மீண்டும் திறந்துள்ளது.

51 மணி நேரம்... 2300 பணியாளர்கள்... ரயில் விபத்தை எப்படி கையாண்டது அஸ்வினி வைஷ்ணவ் குழு?

அதேபோல், பாஜகவுடன் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பிரிவினைக்குப் பிந்தைய ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையால் 2018ஆம் ஆண்டில் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் பாஜக அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எடுத்து வருகிறது.

பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். அப்போது, கூட்டணி தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைக்க பாஜகவின் மாநில தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசும் பாஜகவுடன் இணக்கமாக போக்கையே கையாள்வதால், இதற்கு முந்தைய காலகட்டங்களில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை அமித் ஷா நிராகரித்தே வந்துள்ளார். இதுபோன்ற சம்பங்கள் இனிவரும் நாட்களில் நடக்காமல் இருக்க அமித் ஷாவை சந்தித்து சந்திரபாபு நாயுடு சமரசம் பேசியதாக தெரிகிறது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது கூட்டணியில் வந்தால் அது தங்களுக்கு பலமாகவே இருக்கும் என பாஜக நினைப்பதாக தெரிகிறது. எனவே, 2024ஆம் ஆண்டு தேர்தலில் சிரோமணி அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு, நடைபெறவுள்ள ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலேயே தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

click me!