காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் மகாராஷ்டிரா மாநிலம் வரும்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் இணைவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் மகாராஷ்டிரா மாநிலம் வரும்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் இணைவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ஹெச் கே பாட்டீல், சட்டப்பேரவைத் தலைவர் பாலசாஹேப் தோரட், முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை மாதோஸ்ரீயில் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரேவைச் சந்தித்தனர்.
அப்போது மகாராஷ்டிரா வரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே இருவரும் ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரையும், காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, பாரத் ஜோடோ நடைபயணத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர். ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு ஆதரவுதெரிவித்துள்ள சரத் பவார் , நடைபயணத்தில் பங்கேற்பது இன்னும் உறுதியளிக்கவில்லை எனத் தெரிகிறது
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ சரத் பவாரின் பதிலும் சாதகமாக இருந்தது, ஆனால், நடைபயணத்தில் பங்கேற்பது குறித்து இன்னும் அவர் முடிவு செய்யவில்லை. ஒருவேளை அவர் பங்கேற்காவிட்டால்,அவரின் மகள் சுப்ரியா சுலே, மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் வருவார்கள். அசோக் சவானின் சொந்தநகரான, நான்தத்தில் ராகுல் காந்தியை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை தொடர்கிறார்கள்.
நவம்பர் 7ம் தேதி ராகுல் காந்தியின் நடைபயணம் மகாராஷ்டிராவுக்குள் நுழைகிறது, 20ம் தேதி புல்தானா மாவட்டத்தில் முடிகிறது.மகாராஷ்டிரா மாநிலத்தில் 283 கி.மீ தொலைவுராகுல் காந்தி நடக்க உள்ளார். 4 வாரங்கள் மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பயணிக்கிறார்.
நான்தே நகரில் நவம்பர் 8ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்தேரி கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. நான்தே, புல்தானாவில் உள்ள ஷெகவ் நகரில்இரு பெரிய பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்