ரீமல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரீமல் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் பருவமழைக்கு முந்தைய முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமல் என்றால் அரபி மொழியில் ‘மணல்’ என்று பொருள். ஓமன் நாடு இந்தப் பெயரை வைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ரீமல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு மேற்கு வங்கம் - வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையில் ரீமல் புயல் கரையைக் கடக்கும் என்றும், அப்போது காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
undefined
புயலை முன்னிட்டு பல்வேறு விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 12 குழுக்களைத் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு மேலும் 5 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒடிசா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழக ஒப்பந்தகாரர்கள்: ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த நிலையில், ரீமல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரீமல் புயலைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணத்தை அதிகரிக்க இந்திய கடற்படை தற்போதுள்ள நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (எஸ்.ஓ.பி) பின்பற்றி ஆயத்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படை தலைமையகத்தால் விரிவான தயார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடற்படை தலைமையகத்தில் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக நிவாரணம் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்களை இந்திய கடற்படை தயார் செய்துள்ளது. கூடுதலாக, சீ கிங் மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.
உடனடி உதவிகளை வழங்க சிறப்பு டைவிங் குழுக்கள் கொல்கத்தாவில் தயார்நிலையில் உள்ளன. மேலும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் டைவிங் குழுக்கள் விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் உள்ளன. இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள், நிவாரணம் மற்றும் மருத்துவப் பொருட்களுடன் கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விசாகப்பட்டினம் மற்றும் சில்காவிலிருந்து தலா இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.