உத்தவ் தாக்கரேவுக்கு வலுவாக ஆப்பு.. ஆட்சியை அடுத்து கட்சியிலும் செக்.? ஏக்நாத் ஷிண்டே மூலம் பாஜக மெகா பிளான்?

By Asianet TamilFirst Published Jul 1, 2022, 7:37 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பிளந்து பாஜக ஆதரவுடன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே ஆகியிருக்கும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு கட்சி ரீதியாகவும் நெருக்கடியாக அமையுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த 2019 அக்டோபரில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா ஒரே கூட்டணியில் போட்டியிட்டன. தேர்தலில் சிவசேனா 56 இடங்களிலும் பாஜ்க 105 இடங்களிலும் என 161 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க தேவையான 145 என்ற மேஜிக் எண்ணுக்கு அதிகமாகவே இக்கூட்டணி வென்றது. அதிக இடங்களில் வென்றதால், பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாஜ்பாய்-அத்வானி-பால் தாக்கரே காலத்தில் இருந்ததைப் போல முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்தார். இதுதொடர்பாகப் பேசி பார்த்தும் பலனில்லாததால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து மகா விகாஸ் என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை பெற்றார் உத்தவ் தாக்கரே.

இதற்கு முன்பு சிவசேனா - பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தபோதெல்லாம் பால் தாக்கரே குடும்பத்திலிருந்து யாரும் எந்தப் பதவியையும் ஏற்றதில்லை. ஆனால், தாக்கரே குடும்பத்தின் அந்த மரபை உடைத்து தானே முதல்வரானார் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. அவருடைய மகனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், இக்கூட்டணியை கலகலக்க செய்ய பாஜக காலம் பார்த்துக்கொண்டிருந்தது. அதற்கான தருணம் தற்போதுதான் உருவானது. சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்தார். ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்தார்கள்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!!

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தியும் முடியாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி பாஜக உத்தவ் தாக்கரேவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.  இதன்மூலம் உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக செக் வைத்திருக்கிறது. சிவசேனாவின் அதிருப்தி அணியின் எம்.எல்.ஏ.க்களையும் பாஜக மற்றும் அதனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களைச் சேர்த்தால் ஆட்சி அமைக்கத் தேவையான 145 என்ற எண்ணிக்கையை இந்த அணி தாண்டிவிட்ட்டது. ஏற்கனவே தனக்கு 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வரும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு அது சிக்கலாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனை... முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே!!

எப்போதும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கிதான் கட்சி நிர்வாகிகள் நகருவார்கள். தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருப்பதன் மூலம், எஞ்சிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் நகர்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன்மூலம் சிவசேனா தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகவும் வாய்ப்புகள் கூடியிருக்கிறது. அதற்கும் மேல் பிரச்சினை நீடிக்கும் நிலையில், சிவசேனாவின் கட்சி சின்னம் முடக்கவும் படலாம். பாஜகவின் பரிபூரண ஆசி ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருப்பதால் எதுவும் நடக்கலாம் என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். 

இதையும் படிங்க: ஒரே பாணியில் கவிழ்ந்த கர்நாடகா. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகள்.. 3 எதிர்க்கட்சி அரசுகள் காலியான கதை!

2019 தேர்தலுக்குப் பிறகு தங்கள் முதுகில் குத்தியதாக உத்தவ் தாக்கரே மீது கடும் கோபத்தில் இருந்த பாஜக, முதல் கட்டமாக அவருடைய விரலை வைத்தே கண்களை குத்து வைத்து, முதல்வர் பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி கணக்குத் தீர்த்திருக்கிறது. அடுத்தகட்டமாக சிவசேனா கட்சியிலிருந்தும் தாக்கரே குடும்பத்தினரை காலி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அன்று முதல்வர் பதவியை சிவசேனாவுக்காகக் கேட்டுதான் உத்தவ் தாக்கரே, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இன்று, சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ. அணிக்கே முதல்வர் பதவியை வழங்கி, சிவசேனாவுக்குள் ஆட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது பாஜக. ஆக மொத்தத்தில், சதுரங்க வேட்டையில் உத்தவ் தாக்கரே சிக்கியிருக்கிறார். மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்டம் ஆரம்பம் ஆகியிருக்கிறது.  அதிலிருந்து உத்தவ் தாக்கரே எப்படி மீள்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

click me!