
கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான சத்துள்ள உணவு வழங்குவதற்காக இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்துக்கு “மாத்ரு பூர்ணா” என்று பெயரிடப்பட்டு, நேற்று முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், கர்பிணிகள், பாலூட்டும் ஏழை தாய்களுக்கு சத்துள்ள சரிவிகித உணவுகள் கிடைக்கும் என கர்நாடக அரசு எண்ணுகிறது.
இந்த “மாத்ரூ பூர்ணா” திட்டத்தின் கீழ் மாதத்தில் 25 நாட்கள் கர்பிணிகள், பாலூட்டும் தாய்களுக்கு இலவசமாக மதிய உணவு கிராமபுறங்களில் கிடைக்கும். கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளில் இவர்களுக்கு உணவு வழங்கப்படும்.
இவர்களுக்கு வழங்கப்படும் உணவில் அரிசி சாதம், சாம்பார் அல்லது பருப்பு, பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, 200 மில்லி பால் ஆகியவை வழங்கப்படும். முட்டை சாப்பிடாத பெண்களுக்கு கூடுதலாக பால் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக கர்நாடக அரசு 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில், ரூ.302 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ தாய்மார்களுக்கும், கர்பிணிப் பெண்களுக்கும் சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாய்மார்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தால், குழந்தைகளின் உடலும் நலமாக இருக்கும். பச்சிளம் குழந்தைகள் மரணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துக்குறைபாட்டால், தவிக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்” என்றார்.
இந்த மதிய உணவு திட்டம் கர்பிணிப் பெண்கள் கருவுற்றதில் இருந்து தொடர்ந்து 6 மாதத்துக்கும், குழந்தை பிறந்தபின் அடுத்த 6 மாதத்துக்கும் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட துணை கமிஷனர் மேற்பார்வையில் இந்த திட்டம் செயப்படுத்தப்படும். கர்பிணிகள், பாலூட்டும் தாய்கள் அங்கன்வாடிக்கு வந்து உணவுகளைப் பெற்றுச் செல்லலாம்.