பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு எதிராக 23-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு!

First Published Oct 3, 2017, 8:43 PM IST
Highlights
Court to frame charges against Marans in telephone exchange case on Oct 23


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு எதிராக வரும் 23-ந்ேததி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தன்னுடைய சகோதரரின் நிறுவனமான சன் குழுமத்திற்கு, சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், 2007 -இல் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, தில்லி சிபிஐ போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரிஷியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கெளதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதிவேக இணைப்புகளை சன் குழுமத்திற்கு பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் சன் குழுமத்தலைவர் கலாநி மாறன், அவரது சகோதரரும், மத்திய முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன், பிஎஸ்என்எல் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் தொலைக்காட்சி குழும எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி, பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதிமாறனின் நேர்முக உதவியாளர் கெளவுதமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு தயாநிதிமாறன் நேரில் ஆஜரானார். இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை அடுத்து அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்படுவதாகவும், அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் குற்றச்சாட்டு பதிவு விசாரணையில் ஆஜராவதற்காக தயாநிதி மாறன் நீதிமன்றம் வந்திருந்தார். ஆனால், அவரின் சகோதரர் கலாநிதிமாறன் வரவில்லை. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரி அவர்சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் முன், தயாநிதி மாறன், வி. கவுதமன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.நடராஜன், மாறன் சகோதரர்கள் மீது வரும் 23-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டார்.

click me!