
மற்ற மாநில மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அதேசமயம், உங்கள் தாய்மொழியை ஒருபோதும் ஒதுக்கிவிடாதீர்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.
ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் 6 தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் தொடக்க விழாவுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது-
பிற மாநில மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், ஒருபோதும், நீங்கள் சார்ந்திருக்கும் தாய் மொழியை ஒதுக்கிவிடாதீர்கள். முதல்வர் சந்திரபாபு நாயுடு, நான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆங்கில வழிக்கல்வியில் கூட படிக்கவில்லை. நாங்கள் சார்ந்திருக்கும் தாய்மொழியில்தான் படித்தோம்.
ஆந்திராவில் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழிக் கட்டாயம் என்று முதல்வர் சந்திரபாபு கொண்டு வந்துள்ளது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. அதேபோல, அனைத்து நிறுவனங்களும், ஷாப்பிங் மால்களும், ஓட்டல்களும், வர்த்தக நிறுவனங்களும் தங்கள் பெயர் பலகைகளை தெலுங்கு மொழியில் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி, சீன மொழியில் கூட பெயரைச் சேருங்கள். ஆனால், தாய்மொழி என்பது கண்டிப்பாக தேவை. கட்டாயமாகும்.
துணை ஜனாதிபதியான நான் அரசியல் ரீதியாகப் பேசக்கூடாது. ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது துறைகள் மூலம் மேம்பாட்டு பணிகளை துரிதமாகச் செய்வதை பாராட்டுகிறேன்.
அதேபோல, நதிகளை இணைக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவின் முயற்சிக்கும் பாராட்டுக்கள். நாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம், மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். நதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அவைதான் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பவையாகும்.
மத்தியஅரசும், ஆந்திர அரசும் தீவிரமாகச் செயல்பட்டு, ஆந்திரா-போலாவரம் நீர்பாசனத் திட்டத்தை விரைவாக முடிக்க முயற்சிக்க வேண்டும். தேர்தல் நேர அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, மேம்பாட்டு பணிகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.