கர்நாடகா பந்த்: பெங்களூருவில் 144 தடை உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Sep 28, 2023, 4:35 PM IST

கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதால் அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பாக பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழகத்துக்கு கூடுதலாக 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, சாந்தகுமார் குருபுரு தலைமையில் பெங்களூருவில் கடந்த 26ஆம் தேதி (நேற்று முன் தினம்) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தலைமையிலான பல்வேறு கன்னட அமைப்புகள் ஒருங்கிணைந்த ‘கன்னட ஒக்குடா’ சார்பில் செப்டம்பர் 29ஆம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை விட, கர்நாடக மாநிலம் தழுவிய பந்த் வீரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா பந்த்துக்கு 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக வட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். அதுதவிர, பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து  முடங்கும் எனவும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும் எனவும் வட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கிடையே டவுன் ஹால் முதல் ப்ரீடம் பார்க் வரை மிகப்பெரிய அளவில் கன்னட அமைப்பினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், கன்னட ஆதரவு அமைப்புகள் ஆகியவை போராட்டம் நடத்துகின்றன. கர்நாடகா முழு அடைப்பிற்கு ஓலா, உபர் ஓட்டுநர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால், போக்குவரத்து சேவை முடங்கும் என தெரிகிறது.

அதிமுக கூட்டணி முறிவு: தமிழக பாஜக தலைமைக் குழு ஆலோசனை!

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை விட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பெங்களூர் பந்த்தின்போது, 144 தடை விதித்து இருப்பதை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த வட்டாள் நாகராஜ், தங்களது பந்த்துக்கு போலீசார் கண்டிஷன்களை போட்டால் கடும்  விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!