கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ரூ.37 கோடி மதிப்பில் சாம்சங் நிறுவனம் உதவி

By karthikeyan VFirst Published May 4, 2021, 3:12 PM IST
Highlights

கொரோனா 2ம் அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு மொத்தமாக ரூ.37 கோடி மதிப்பில் பல்வேறு உதவிகளை செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிவருகிறது. அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவைகளும் அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரித்தது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு.

இந்தியா கொரோனாவின் கோர முகத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். 

இந்நிலையில், பெருந்தொகையில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது சாம்சங் நிறுவனம். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(ரூ.37 கோடி) மதிப்பில் மருத்துவ உதவிகள் மற்றும் நிதியுதவி செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளுக்கு ரூ.22 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ள சாம்சங் நிறுவனம், ரூ.15 கோடி மதிப்பில் மருத்துவ உதவிகளை செய்துள்ளது.

ரூ.15 கோடி மதிப்பில் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 10 லட்சம் எல்டிஎஸ் ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளையும் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் நிறுவனத்தின் இந்த செயல்பாடு, இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

click me!