
நவம்பர் மாத ஊதியத்தை வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாகக் கொடுங்கள் என கோவா மாநில அரசு ஊழியர்கள் முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.1000, ரூ.500 நோட்டுக்களைச் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த பின், வங்கியில் புதிய நோட்டுக்களைப் பெறுவது கடினமாக வரும் நிலையில், கோவா அரசு ஊழியர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகருக்கு, கோவா அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் நாசரேத் எழுதியுள்ள கடிதத்தில், “ மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தடை செய்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம்.
தற்போது நாட்டில் நிலவும் நிதிநெருக்கடியான சூழ்நிலை சரியாக சிறிது காலம் பிடிக்கும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெளிவாகக் கூறியுள்ளார். ஆதலால், நடப்பு மாத சம்பளத்தை எங்களுக்கு வங்கியில் நேரடியாகச் செலுத்தாமல், சம்பளத்தை ரொக்கமாகக் கொடுக்க வேண்டுகிறோம்.
அரசு ஊழியர்களுக்கு ஆன்-லைனில் சம்பளத்தை அரசு செலுத்தினால், அதைப் பெற ஏ.டி.எம்.களில் அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், கால விரயம் ஏற்படும். அந்த நேரத்தை ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்துவார்கள். ஏ.டி.எம்.களில் தங்கு தடையின்றி பணம் கிடைக்கும் சூழல் ஏற்படும் வரை ரொக்கமாகவே ஊதியம் வழங்க கோருகிறோம் '' தெரிவித்துள்ளார்.