
குல்புஷனுக்காக வாதாட சால்வேயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ள இந்தியர் குல்புஷன் ஜாதவ் தொடர்பான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வாதிட வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிறார்.
இந்த தகவலை மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வுக்கு அவர் உளவு வேலை பார்த்ததாக கூறி அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. மரண தண்டனையை நிறுத்திவைத்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜாதவ்-க்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதாடுகிறார்.
இந்நிலையில், சஞ்சய் கோயல் என்பவர் டுவிட்டரில் சுஷ்மா சுவராஜிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், குறைந்த செலவில் சிறந்த வழக்கறிஞர் யாராவது, குல்புஷன் யாதவுக்கு ஆதரவாக வாதிடச் செய்யலாமே, சால்வே அதிகமாக கட்டணம் வசூலிப்பாரே? எனக் கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் சுஷ்மா செய்த டுவிட்டில், “ வேறு வழக்கறிஞர்கள் தேவையில்லை, ஹரிஸ் சால்வே இந்த வழக்கில் தனது ஊதியமாக ஒரு ரூபாய் மட்டுமே வாங்குகிறார்’’ எனத் தெரிவித்தார்.