மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு... பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு அதிகரிப்பு! 

First Published Nov 15, 2017, 11:05 AM IST
Highlights
sabarimala sannidhi open today evening for mandala pooja


கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற புனிதத் தலமான சபரிமலையில், இன்று சந்நிதி திறக்கப்படுகிறது. 

சபரி மலையில் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு நேரத்திலும்  பூஜைகளுக்காக நடை திறப்பது வழக்கம். ஆனால், முக்கிய பூஜைக் காலமான  மண்டல பூஜை நேரத்தில் நெடு நாட்கள் சந்நிதி திறந்து வைக்கப்படும். இக்காலங்களில் பக்தர்கள் அதிகம் வருகிறார்கள். 

இந்த மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.15 புதன்கிழமை இன்று மாலை திறக்கப் படுகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதப் பிறப்பான முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் 'மண்டல காலம்' என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் நவ.17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. ஆனால், கேரளத்தில் ஒருநாள் முன்னதாகவே நவ.16ஆம் தேதி நாளை கார்த்திகை மாதம் பிறக்கிறது. இது முதல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை புதன் கிழமை இன்று மாலை 5:00 மணிக்குத் திறக்கப் படுகிறது.

நவ.15 இன்று மாலை 5 மணிக்கு துவங்கி, வரும் டிச.26 ஆம் தேதி இரவு 10 மணி வரை இந்த மண்டல பூஜை நடைபெறும். பின்னர் டிச.30 ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 2018 ஜன.20 ஆம் தேதி காலை 7 மணி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று நெய்யபிஷேகத்துடன் பூஜைகள் நிறைவு பெற்று நடை மீண்டும் சாத்தப்படும். மகரவிளக்கு நாள் வரும் 2018 ஜன.14 ஆம் தேதி. அன்று மகர ஜோதி காணும் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்காக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை தேவஸ்வம் போர்டு செய்துள்ளது. கேரள அரசு போக்குவரத்துக்கழகம் முதற்கட்டமாக 300 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

சபரிமலைக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை அடுத்து, சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஆண்டு இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

click me!