
ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றின் தோல்விகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டு வருவதை ஆகியவற்றைப் பார்த்து மக்களே களத்தில் இறங்கி நிதி அமைச்சர் பதவியை கேட்பார்கள் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாகச் சாடியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, லோக்ஷகி பச்சாவோஅந்தோலன் எனும் அமைப்பு, பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கைகளின் தோல்விகள் குறித்து பேச மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இதற்காக அங்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, அகமதாபாத் நகரில் நேற்று பேசியதாவது-
மக்களே கேட்பார்கள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறைவு, ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் தோல்விகளைப் பார்த்து நாட்டு மக்களே களத்தில் இறங்கி நிர்வாகத்தை சரி செய்ய நிதி அமைச்சர் பதவி கேட்பார்கள்.
ரூ.25 லட்சம் கோடி
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் களையப்படாத, தீர்வு காணப்படாத சில விஷயங்களால் இப்போதுள்ள பா.ஜனதா ஆட்சிக்கு சில பிரச்சினைகள் நேர்கிறது. வங்கியில் வாராக் கடனும், தேங்கிக்கிடக்கும் வளர்ச்சித்திட்டங்களின் மதிப்பு மட்டும் ரூ.25 லட்சம் கோடியாகும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேங்கிக்கிடந்த வளர்ச்சித் திட்டங்கள் அளவு குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் ரூ.18 லட்சம் கோடியிலான திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது. பழைய திட்டங்கள் விரைவுப்படுத்தி முடிக்கப்படவில்லை, புதிய திட்டங்களும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
வாராக்கடன்
வங்கிகளில் வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடி தொடர்ந்து அப்படியே வசூலிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. இப்போது, 5.7 சதவீதமாக இருந்தாலும், அது 3.7 சதவீதத்துக்கு ஒப்பானதாகும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, அமைப்புசார்ந்த துறைகளை மட்டும் கணக்கிடுகிறார்கள், ஆனால், அமைப்புசாரா துறைகளிலும் அதே அளவுக்கு வளர்ச்சி இருக்கிறது. இது மிகவும் தவறானதாகும்.
அதிகம் பாதிப்பு
மோடி அரசு அமல்படுத்திய ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரியால் அதிகம் பாதிக்கப்பட்டது அமைப்பு சாரா துறைகளும், அதில் ஈடுபட்டுள்ள மக்களும்தான். அவ்வாறு பாதிக்கப்பட்டஅமைப்புசாரா துறைகளின் மோசமான எதிரொலிதான் பொருளாதாரத்தில் இருக்கிறது.
தவறு
மத்திய அரசின் கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரியில் மிகப்பெரிய தவறு என்பது, 40 சதவீதம் வருவாய் தரக்கூடிய பெட்ரோலிய பொருட்கள், மது, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் சேர்க்காமல் விட்டதாகும். இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து இருந்தால், மக்கள் மிகப்பெரிய நிம்மதி அடைந்து இருப்பார்கள்.
2014ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி பதவி ஏற்கும் போது, பெட்ரோலிய கச்சா எண்ணெய் பீப்பாய் 110 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் 30 டாலராகக் குறைந்தது. ஆனால், இந்த பலன்கள் யாவற்றையும் மக்களுக்கு அளிக்கவில்லை. வரிகளை கூடுதலாக வித்து அரசு பலனடைந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், உற்பத்தி வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.