கூண்டு அடைத்தலுக்கு ‘குட் பை’... 2 மணி நேரத்துக்குள்  இலவச தரிசனம்... திருப்பதியில் வரப்போகுது மாற்றம்!

First Published Nov 15, 2017, 9:52 AM IST
Highlights
new token system will introduce to avoid staying in rooms for thirumala thirupathi swami darshan


பக்தர்கள் அதிக அளவில் குவியும் புனிதத்  தலமாகத் திகழ்கிறது திருப்பதி ஏழுமலையான் கோவில். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், தேவஸ்தான நிர்வாகம் புதுப் புது வழிமுறைகளை அறிவிக்கிறது. ஆதார் கட்டாயம் என்று சில வகை தரிசனத்துக்கு அறிவித்தது. அப்படியும் கூட்டம் குறைந்த பாடில்லை. 

இந்நிலையில், கட்டண தரிசனங்கள் மட்டுமல்லாது, இலவச தரிசனத்திலும் விரைந்து பெருமாளை தரிசித்து வர பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கவுள்ளது தேவஸ்தான நிர்வாகம்.  ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் விதமாக நேர ஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக இணைச் செயல் அலுவலர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். 

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசைகளிலும் வைகுண்டம் காத்திருப்பு அறையிலும் அமர்த்தி வைக்கப் படுகின்றனர். அவ்வாறு காத்திருக்கும் போது பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் குறைந்த நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்யும் விதமாக நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம், இலவச தரிசனத்திலும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. 

இந்த திட்டத்துக்காக,  திருமலையில் 29 இடங்களில் 150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவச தரிசனத்துக்கான நேரம் குறித்து பதிவு செய்யப்பட்ட டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கனைப் பெறும் பக்தர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு வைகுண்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

இதன் மூலமாக டோக்கன் பெற்ற பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்துவது, புனித நீராடுவது, திருமலையில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களைக் காண்பது உள்ளிட்டவற்றை தாங்கள் திருமலையில் இருக்கின்ற நேரத்துக்குள் செய்து விடலாம்.  ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது போன்ற நிலை இருக்காது. 

இந்த முறைக்காக, வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சோதனை முறையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் பக்தர்களுக்கு ஏற்படும் நிறை குறைகளை அறியப் படும். அதன் அடிப்படையில்  தீர்வு காணும் விதமாக நடைமுறைகளை மாற்றப்பட்டு, வரும் 2018 பிப்ரவரி முதல் நிரந்தரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது” என்று கூறினார். 

click me!