
ஜி.சாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டதை அடுத்து சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைத் தவிர்த்து ஏனைய தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் வானிலை குறித்த தகவல்களை துல்லியமாக கணித்து அதனை பூமிக்கு தெரிவிக்கும் ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணுக்கு செலுத்தியது.
செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ஜிசாட் 9 செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுவதாகத் தெரிவித்தார். ஜிசாட்டிலிருந்து பெறப்படும் தகவல்கள் தெற்காசிய நாடுகளுக்கு பலன் தரும் என்று குறிப்பிட்ட மோடி, அமைதி, வளர்ச்சி, மனித நேயத்தில் சார்க் நாடுகள் ஒன்றிணைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
வங்கதேச பிரதமர் பாராட்டு
ஜிசாட் 9 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்திய இந்தியாவை பாராட்டுவதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை தெற்காசி நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று தாம் நம்புவதாகவும் ஹசினா குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் புகழாரம்
தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புக்கு இன்றைய தினம் முக்கியமானது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்கரப் கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடையாத ஆப்கானிஸ்தானுக்கும் செயற்கைக்கோள் இணைப்பு இந்தியா மூலம் கிடைத்துள்ளதாகவும் கனி தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் பாராட்டு
தெற்காசிய நாடுகளுக்கு ஜிசாட் 9 செயற்கைக்கோள் விலைமதிப்பற்ற பரிசு என்று மாலத்தீவு அதிபர் அப்துல் கயீம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பூடான் பிரதமர் பாராட்டு
ஜிசாட் 9 செயற்கைக்கோளால் தெற்காசிய நாடுகள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும், இந்நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் பூடான் பிரதமர் ஷேரிங் தோப்கே தெரிவித்துள்ளார்.