
உத்தரபிரதேசத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணி புரிந்து வரும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 லிருந்து 70 ஆக உயர்த்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அம்மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துமனைகள் வைக்கக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலும், ஒரு அதிரடி நடவடிக்கையாக மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65-ல் இருந்து 70 ஆக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்தநாத் சிங், மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான் மருத்துவர்களின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்தும் இந்த முடிவு என கூறினார்.
அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.